Skip to the text
திருவாய்மொழி

3-5. மொய்ம்மாம்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

முதலையின் பிடியில் அகப்பட்ட யானைக்கு அருள் செய்தவனை நினைவுகூரும் பதிகம். அவனை நினைக்கும்போது தன்னை மறந்து ஆடுவதும் பாடுவதும் இயல்பாகிவிடுவதை ஆழ்வார் சொல்கிறார். வெட்கத்தையும் உலகின் பார்வையையும் கடந்த பக்தியின் வெளிப்பாடு இது. கூத்தாடுவதே வழிபாடாகும் இடம்.

திருவாய்மொழி 3-5 மொய்ம்மாம்‌

2941

மொய்ம்மாம்‌ பூம்பொழில்‌ பொய்கை முதலைச்‌ சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கு அருள்‌ செய்த கார்முகில்‌ போல்‌ வண்ணன்‌ கண்ணன்‌ எம்மானைச்‌ சொல்லிப்‌ பாடி எழுந்தும்‌ பறந்தும்‌ துள்ளாதார்‌ தம்மால்‌ கருமம்‌ என்‌? சொல்லீர்‌ தண்கடல்‌ வட்டத்துள்ளீரே!

2942

தண்கடல்‌ வட்டத்துள்ளாரைத்‌ தமக்கு இரையாத்‌ தடிந்துண்ணும்‌ திண்கழற்கால்‌ அசுரர்க்குத்‌ தீங்கிழைக்கும்‌ திருமாலை பண்கள்‌ தலைக்கொள்ளப்‌ பாடிப்‌ பறந்தும்‌ குனித்து உழலாதார்‌ மண்கொள்‌ உலகில்‌ பிறப்பார்‌ வல்வினை மோதமலைந்தே

2943

மலையை எடுத்துக்‌ கல்மாரி காத்துப்‌ பசு நிரை தன்னை தொலைவு தவிர்த்த பிரானைச்‌ சொல்லிச்‌ சொல்லி நின்று எப்போதும்‌ தலையினோடு ஆதனம்‌ தட்டத்‌ தடுகுட்டமாய்ப்‌ பறவாதார்‌ அலைகொள்‌ நரகத்து அழுந்திக்‌ கிடந்துழைக்கின்ற வம்பரே

2944

வம்பவிழ்‌ கோதை பொருட்டா மால்விடை ஏழும்‌ அடர்த்த செம்பவளத்‌ திரள்வாயன்‌ சிரீதரன்‌ தொல்புகழ்‌ பாடி கும்பிடு நட்டமிட்டாடிக்‌ கோகு கட்டூண்டு உழலாதார்‌ தம்‌ பிறப்பால்‌ பயன்‌ என்னே? சாது சனங்கள்‌ இடையே

2945

சாது சனத்தை நலியும்‌ கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப்‌ பிறந்த வேத முதல்வனைப்‌ பாடி வீதிகள்‌ தோறும்‌ துள்ளாதார்‌ ஓதி உணர்ந்தவர்‌ முன்னா என்‌ சவிப்பார்‌ மனிசரே?

2946

மனிசரும்‌ மற்றும்‌ முற்றுமாய்‌ மாயப்பிறவி பிறந்த தனியன்‌ பிறப்பிலி தன்னைத்‌ தடங்கடல்‌ சேர்ந்த பிரானை கனியைக்‌ கரும்பின்‌ இன்சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை அமுதை முனிவின்றி ஏத்திக்‌ குனிப்பார்‌ முழுதுணர்‌ நீர்மையினாரே

2947

நீர்மையில்‌ நூற்றுவர்‌ வீய ஐவர்க்கு அருள்‌ செய்து நின்று பார்மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்தாடி நீர்மல்கு கண்ணினராகி நெஞ்சம்‌ குழைந்து நையாதே ஊன்மல்கி மோடு பருப்பார்‌ உத்தமர்கட்கு என்‌ செய்வாரே?

2948

வார்புனல்‌ அந்தணருவி வடதிருவேங்கடத்து எந்தை பேர்‌ பல சொல்லிப்‌ பிதற்றிப்‌ பித்தர்‌ என்றே பிறர்‌ கூற ஊர்‌ பல புக்கும்‌ புகாதும்‌ உலோகர்‌ சிரிக்க நின்றாடி ஆர்வம்‌ பெருகிக்‌ குனிப்பார்‌ அமரர்‌ தொழப்படுவாரே

2949

அமரர்‌ தொழப்படுவானை அனைத்துலகுக்கும்‌ பிரானை அமரர்‌ மனத்தினுள்‌ யோகு புணர்ந்து அவன்‌ தன்னோடு ஒன்றாக அமரத்‌ துணிய வல்லார்கள்‌ ஒழிய அல்லாதவர்‌ எல்லாம்‌ அமர நினைந்து எழுந்தாடி அலற்றுவதே கருமமே

2950

கருமமும்‌ கரும பலனுமாகிய காரணன்‌ தன்னை திருமணி வண்ணனைச்‌ செங்கண்‌ மாலினைத்‌ தேவ பிரானை ஒருமை மனத்தினுள்‌ வைத்து உள்ளம்‌ குழைந்து எழுந்தாடி பெருமையும்‌ நாணும்‌ தவிர்ந்து பிதற்றுமின்‌ பேதைமை தீர்ந்தே

2951

தீர்ந்த அடியவர்‌ தம்மைத்‌ திருத்திப்‌ பணி கொள்ள வல்ல ஆர்ந்த புகழ்‌ அச்சுதனை அமரர்‌ பிரானை எம்மானை வாய்ந்த வளவயல்‌ சூழ்‌ தண்‌ வளங்குருகூர்ச்‌ சடகோபன்‌ நேர்ந்த ஓராயிரத்து இப்பத்து அருவினை நீறு செய்யுமே