திருவாய்மொழி 3-10 சன்மம்பலபல
3-10. சன்மம்பலபல
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"சன்மம் பல பல செய்து வெளிப்பட்டு" — பல பல பிறவிகளை எடுத்து வெளிப்பட்டவனைப் பாடும் பதிகம். சங்கும் சக்கரமும் வில்லும் உலக்கையும் வாளும் ஏந்திய அவனது ஆயுதங்களை வரிசைப்படுத்துகிறார். அவதாரங்கள் பல எனினும் நோக்கம் ஒன்றே என்பதே இதன் சாரம். மூன்றாம் பத்து இந்த வெளிப்பாடுகளின் தொகுப்புடன் நிறைவடைகிறது.
சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில் ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து உலகில் வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே
குறைவில் தடங்கடல் கோளரவேறித் தன் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணிவண்ணன் கண்ணன் கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான் நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டிலனே
முட்டில் பல்போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்குரிய கட்டியைத் தேனை அமுதை நன்பாலைக் கனியைக் கரும்பு தன்னை மட்டவிழ் தண்ணந்துழாய் முடியானை வணங்கி அவன் திறத்துப் பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்துப் பரிவிலனே
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத்து அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடரிலனே
இடரின்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண்தேர் கடவி சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே
துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான் துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பமிலனே
துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய் இஇன்பமில் வெந்நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய் மன் பல்லுயிர்களுமாகிப் பல பல மாய மயக்குகளால் இன்புரும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லலிலனே
அல்லலில் இன்பம் அளவிறந்தெங்கும் அழகமர் சூழ் ஒளியன் அல்லி மலர்மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான் எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கமிலனே
துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் மிக்க பல்மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவு கொண்டு நக்கபிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்விலனே
தளர்வின்றியே என்றும் எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாய் அளவுடை ஐம்புலங்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரை கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடிலனே
கேடில் விழுப்புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன பாடல் ஓராயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு ் அவன் நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடையூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகமே