Skip to the text
திருவாய்மொழி

4-1. ஒரு நாயகம்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்" — ஒரே தலைவனாய் உலகையே ஆண்டவர்களின் முடிவை ஆழ்வார் நினைவுபடுத்தும் பதிகம். நாய் கவ்விய கால்களும், உடைந்த பானையும், இழந்த பெருநாடும் — பேரரசர்கள் அடைந்த நிலையை வெளிப்படையாகச் சொல்கிறார். செல்வத்தின் நிலையாமையை உவமையால் அல்ல, வரலாற்றாலேயே நிறுவுகிறார். இது அச்சுறுத்தல் அல்ல; கண்முன் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டுதல்.

திருவாய்மொழி 4-1 ஒரு நாயகம்‌

3007

ஒரு நாயகமாய்‌ ஓட உலகுடன்‌ ஆண்டவர்‌ கருநாய்‌ கவர்ந்த காலர்‌ சிதைகிய பானையர்‌ பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌ திருநாரணன்‌ தாள்‌ காலம்‌ பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ

3008

உய்ம்மின்‌ திறை கொணர்ந்து என்று உலகாண்டவர்‌ இம்மையே தம்மின்‌ சுவை மடவாரைப்‌ பிறர்‌ கொள்ளத்‌ தாம்‌ விட்டு வெம்மினொளி வெயில்‌ கானகம்‌ போய்க்குமைதின்பர்கள்‌ செம்மின்‌ முடித்‌ திருமாலை விரைந்தடி சேர்மினோ

3009

அடி சேர்‌ முடியினராகி அரசர்கள்‌ தாம்‌ தொழ இடி சேர்‌ முரசங்கள்‌ முற்றத்தியம்ப இருந்தவர்‌ பொட சேர்‌ துகளாய்ப்‌ போவர்கள்‌ ஆதலில்‌ நொக்கென கடி சேர்‌ துழாய்‌ முடிக்‌ கண்ணன்‌ கழல்கள்‌ நினைமினோ

3010

நினைப்பான்‌ புகில்‌ கடல்‌ எக்கலின்‌ நுண்மணலின்‌ பலர்‌ எனைத்தோருகங்களும்‌ இவ்வுலகாண்டு கழிந்தவர்‌ மனைப்பால்‌ மருங்கற மாய்தலல்லால்‌ மற்றுக்‌ கண்டிலம்‌ பனைத்‌ தாள்‌ மத களிறட்டவன்‌ பாதம்‌ பணிமினோ

3011

பணிமின்‌ திருவருள்‌ என்னும்‌ அம்சீதப்‌ பைம்பூம்‌ பள்ளி அணி மென்குழலார்‌ இன்பக்‌ கலவி அழுதுண்டார்‌ துணி முன்பு நாலப்‌ பல்லேழையர்‌ தாம்‌ இழிப்பச்‌ செல்வர்‌ மணி மின்னு மேனி நம்‌ மாயவன்‌ பேர்‌ சொல்லி வாழ்மினோ

3012

வாழ்ந்தார்கள்‌ வாழ்ந்தது மாமழை மொக்குளின்‌ மாய்ந்து மாய்ந்து ஆழ்ந்தார்‌ என்றல்லால்‌ அன்று முதல்‌ இன்றறுதியா வாழ்ந்தார்கள்‌ வாழ்ந்தே நிற்பர்‌ என்பதில்லை நிற்குறில்‌ ஆழ்ந்தார்‌ கடற்‌ பள்ளி அண்ணல்‌ அடியவர்‌ ஆமினோ

3013

ஆமின்‌ சுவையவை ஆறொடடிசில்‌ உண்டார்ந்த பின்‌ தூமென்‌ மொழி மடவார்‌ இரக்கப்‌ பின்னும்‌ துற்றுவார்‌ ஈமின்‌ எமக்கொரு துற்றென்று இடறுவர்‌ ஆதலின்‌ கோமின்‌ துழாய்‌ மூடி ஆதியஞ்‌ சோதி குணங்களே

3014

குணங்கொள்‌ நிறை புகழ்‌ மன்னர்‌ கொடைக்‌ கடன்‌ பூண்டிருந்து இணங்கி உலகுடனாக்கிலும்‌ ஆங்கவனை இல்லார்‌ மணங்கொண்ட போகத்து மன்னியும்‌ மீள்வர்கள்‌ மீள்வில்லை பணங்கொள்‌ அரவணையான்‌ திரு நாமம்‌ படிமினோ

3015

படிமன்னு பல்கலன்‌ பற்றோடறுத்து ஐம்புலன்‌ வென்று செடிமன்னு காயம்‌ செற்றார்களும்‌ ஆங்கவனை இல்லார்‌ குடிமன்னு மின்சுவர்க்கம்‌ எய்தியும்‌ மீள்வர்கள்‌ மிள்வில்லை கொடிமன்னு புள்ளுடை அண்ணல்‌ கழல்கள்‌ குறுகுமினோ

3016

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம்‌ விட்ட இஇறுகல்‌ இறப்பென்னும்‌ ஞானிக்கும்‌ அப்பயன்‌ இல்லையேல்‌ சிறுக நினைவதோர்‌ பாசம்‌ உண்டாம்‌ பின்னும்‌ வீடில்லை மறுகலில்‌ ஈசனைப்‌ பற்றி விடாவிடில்‌ வீடஃதே

3017

அஃதே உய்யப்‌ புகுமாறென்று கண்ணன்‌ கழல்கள்‌ மேல்‌ கொய்‌ பூம்‌ பொழில்‌ சூழ்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ குற்றேவல்‌! செய்‌ கோலத்தாயிரம்‌ சீர்த்‌ தொடைப்‌ பாடல்‌ இவை பத்தும்‌ அஃகாமல்‌ கற்பவர்‌ ஆழ்துயர்‌ போய்‌ உய்யற்‌ பாலரே